கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, நாட்டு மக்கள் அனைவரும் ஏப்.,5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்கேற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அன்றைய தினத்தில் நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் மின்விளக்குகளை அணைத்து, அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஒளிர செய்தனர். சிலர் பட்டாசு வெடித்தும், வீதியில் தீபந்தத்துடன் வலம் வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொரோனா தாக்குதலில் முடங்கியுள்ள நிலையில் பட்டாசு வெடித்து கொண்டாடுவதா என சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது.
இது குறித்து மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது: ஊரடங்கு மற்றும் தொற்றுநோயால் மக்கள் நெருக்கடி நிலையில் வாழ்கின்றனர். பட்டாசுகளை வெடிக்க யாரும் அவர்களிடம் கேட்கவில்லை. இருப்பினும், அவர்கள் அவ்வாறு செய்தால், அதில் என்ன தீங்கு இருக்கிறது? இது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. காற்றின் தரம் மோசமடைந்ததாக கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். ஆண்டு முழுவதும் மாசு உச்சத்தில் இருக்கிறதே, அதை என்ன சொல்கிறீர்கள்? இந்த சம்பவத்திலிருந்து ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என்று எல்லோரிடமும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே திரிணாமுல் காங்., மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி தனது டுவிட்டர் பதிவில், ‛ஒரு தொற்றுநோயைக் கொண்டாடிய முதல் நாடு இந்தியா. பட்டாசுகள், ஆடம்பரமான விளக்குகள் மற்றும் வானவெடிகள் மூலம், ஒரு தொற்றுநோயான கொரோனாவை கொண்டாடும் முதல் தேசமாக நாம் மாறிவிட்டோம். இதைக் கையாள எத்தனை பேர் உண்மையில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றினார்கள் என்பதையும் நான் சிந்திக்கிறேன். சுய தனிமையா அல்லது சுய அழிவா?,' என பதிவிட்டுள்ளார்.